Monday, December 6, 2010

ஆஷூரா

688. குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி (ஸல்) அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் ‘(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!” எனக் கூறினார்கள்.
புஹாரி : 1893 ஆயிஷா (ரலி).


689. அறியாமைக்கால மக்கள் (குறைஷியர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி (ஸல்) அவர்கள், ‘(ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகிறவர் அதை விட்டுவிடலாம்” என்று கூறினார்கள்.
புஹாரி : 4506 இப்னு உமர் (ரலி).
690. (ஒருநாள்) நான் உணவுண்டு கொண்டிருந்தபோது அஷ்அஸ் இப்னு கைஸ் அவர்கள் வந்து, ‘இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே” என்று (நான் நோன்பு நோற்காமல் உண்டு கொண்டிருப்பதைக் கண்டு வியந்து) கூறினார். நான், ‘ரமளான் (நோன்பு) கடமையாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது அந்த (ஆஷுரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கைவிடப்பட்டது. எனவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்” என்று சொன்னேன்.
புஹாரி : 4503 இப்னு மஸ்ஊத் (ரலி).
691. முஆவியா (ரலி) ஹஜ்ஜுக்குச் சென்ற ஆண்டு ஆஷுரா நாளில் மிம்பரில் நின்றுகொண்டு, ‘மதீனா வாசிகளே! உங்கள் அறிஞர்கள் எங்கே? நபி (ஸல்) அவர்கள், இது ஆஷுரா நாளாகும். இதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை என்று கூறியதை நான் செவியுற்றிருக்கிறேன். நோன்பு நோற்றிருக்கிறேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும்; விரும்பாதவர் விட்டு விடட்டும்’ என்று கூறினார்.
புஹாரி : 2003 ஹூமைத் பின் அப்துர்ரஹ்மான் (ரலி).
692. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
புஹாரி : 2004 இப்னு அப்பாஸ் (ரலி).

693. ஆஸுரா நாளை யூதர்கள் பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்!” என்றார்கள்.
புஹாரி : 2005 அபூமூஸா (ரலி).
694. ”ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!”
புஹாரி: 2006 இப்னு அப்பாஸ் (ரலி).